இரவாடிய திருமேனி
இரவாடிய திருமேனி
வேல்முருகன் இளங்கோவின் இரண்டாவது நாவல். இந்த புத்தகக்காட்சியில் வாங்கிய நூல்களில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய சில நூல்களுள் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஏழு நாட்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து முடித்தேன். அடர்த்தியான மொழி விட்ட இடத்திலிருந்து தொடங்கவிடாமல் முந்தைய பக்கத்தையும் மேய்ந்து பின் தொடர வைத்தது.
கள்வர்களைக் குறித்த சில கதைகளை வாசித்திருந்தாலும் சாம்பனின் களவும் வாழ்வும் சில தர்மங்களோடு இழையோடிப் போகிறது.
சுருளி, சங்கன் இருவரின் வாழ்வு ஒருப் பொழுதில் தலைகீழாய் மாறிப்போவதும் அதற்காக சாம்பன் செய்யும் பரிகார பிரயத்தனங்களும் மாதம் முழுக்க சாம்பன் வைத்த உணவைத் தின்று அவனைக் கொல்ல பழியோடுக் காத்திருக்கும் உணர்வு மனித மனங்களின் அலைக்கழிப்பை செம்மையாகச் சுட்டியிருக்கிறது.
செந்நாய்களையும் யானையையும் காட்சிப்படுத்திய விதம் கதையின் தொடக்கத்தில் சாம்பனின் தண்டனையை நிறைவேற்ற காத்திருக்கும் யானையின் பாதத்தையும் அவன் மனவோட்டத்தையும் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. கேயாஸ் போன்று சில உருவகங்கள் நாவல் முழுக்க பின் தொடர்கிறது.
காகம்
காமம்
காமம் மனிதனின் தலையில் செருகப்பட்ட முட்கிரீடமாய் கதை முழுக்க வலியோடு அலைகிறது. பரிதி மற்றும் கோதையின் காமம் பெருவலி..
சில கதைகள் வாசிப்பவர்களிடம் தன்னை எங்கே வைத்துக்கொள்ள என்று கேட்டுக்கொள்ளும் தலையில் வைப்பவை மறந்துப் போய்விட மனதில் வைப்பவை நிலைத்து நிற்கும் ஆனால் தலைக்குள் இருப்பவை நம்மை நம் இயல்பை சற்று குலைத்தும் விடும் ஏனெனில் அதன் சூடு அதிகமானது. வேல்முருகன் இரண்டிற்கும் முயற்சித்து இருக்கிறார்.
இத்தனை மொழியடர்வு தேவையா என்று கேட்டுக்கொண்டாலும் வாசிப்பை நிறுத்த மனம் இடம் தரவில்லை
தீக்கடம்பை என்னும் மலர்
மலரைத் தேடும் பயணம்
கேட்டுக் கேட்டு பழகிய கதையாகவே இருந்தாலும் சொல்லப்படும் விதம் எழுத்தாளரை மதிக்க வைக்கிறது.
இரவாடிய திருமேனி
வாழ்வதன் போக்கில் குறுக்கிடும் சிறு காற்று அசைத்துப்போன இலையில்
தடுமாறும் விழிகளால் நிகழ்ந்த பெருவிபத்தை காலம் தன் காலக்கோட்டில் அடர்த்தியாய் வரைந்து வைக்கும் என்பதை நிரூபித்த மற்றுமொரு கதை அல்லது நாவல்.
வாழ்த்துகள் வேல்முருகன் இளங்கோ.