ஊரடங்கு ( ஐந்தாம் ஆண்டு)
ஊரடங்கு
வட சென்னையின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திற்குப் பிறகான நிறம் எப்படி இருக்குமென தெரியுமா?
1985ல் எங்கள் வீட்டினருகேயே ஒரு கடை புதிதாக திறக்கப்பட்டது. அது விசிஆர் என்று அழைக்கப்படும் வீடியோ கேசட் ரெகார்டரை வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை. அதுவரை சனிக்கிழமை ஹிந்தி படங்களையும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் படங்களையும் மட்டுமே காணக் கிடைத்த எங்களுக்கு ( அடிக்கடி அப்பா சினிமாவுக்கு அழைத்துச் செல்வார் அது தனி விஷயம்) டெக் வாடகைக்கு சல்லிசாக கிடைக்குமென்பதும் நாங்கள் விரும்பும் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதும் கொண்டாட்டத்திற்கான ஒன்றாக ஆகியது.
வெள்ளிக்கிழமை இரவில் வாடகைக்கு எடுக்கப்படும் டெக் ஞாயிறு மாலையில் திருப்பி கொடுக்கப்படும் வரையில் எத்தனை படங்கள் முடியுமோ அத்தனையும் பார்த்து விட திட்டம் தீட்டுவோம். அப்பாவின் அனுமதியைப் பெற அவரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே அப்பா வாய்ப்பு தருவார். எந்தெந்த படங்கள் என யோசித்து கடைக்காரரிடம் முன்னமே சொல்லி வைத்தும் விடுவோம்.
சினிமா ஒரு கலையென்றால் அதைக் காண நாங்கள் செய்த பிரயத்தங்கள் மற்றொரு கலை. வெளிச்சம் வராத பகல்ப் பொழுதினை உண்டாக்க ஓட்டு வீட்டின் கூரையில் சாளரத்தை போர்த்தத் தொடங்கி நொறுக்குத் தீனிக்கு அம்மாவை ஐஸ் வைத்து இரவு ஒன்பது மணிக்கு ஆன் செய்யப்படும் திரை காலை ஏழு மணிவரையிலும் இடைவிடாத மூன்று அல்லது நான்கு படங்களைப் பார்த்த பிறகு உறங்கச் செல்வதும் என பொழுது போயிருக்கின்றன.
எங்கள் வீட்டின் ரஜினி கமல் என இரு ரசிகப் பட்டாளங்கள் இருக்கின்றன.
மாப்பிள்ளை – வெற்றி விழா
இரண்டும் ஒரே நாளில் ரிலீசான படங்கள்
குணா – தளபதி
இப்படி கமல் ரஜினி படங்கள் ஒன்றாக வரும்போது எங்கள் வீட்டு இளவல்களோடு பரபரப்பாக ஆகிவிடும். கார்த்திக் ரசிகையான எனக்கு எதுவென்றாலும் போங்கடா என சொல்லி விடுவேன்.
அது ஒரு அழகிய சினிமாக் காலம்..
திரைப்படங்களின் தொடர் மாற்றப் போக்கினை ஓரளவு அவதானித்து வரும் பட்சத்தில் அடுத்தடுத்த காலங்களில் வரவிருக்கும் மாற்றங்களையும் கணிக்க முயற்சிக்கிறேன். பொதுவாக சினிமாக்களில் ஆர்வமுள்ளவர்கள் முன்னெடுக்கும் செயல்பாடுகளை நான் செய்ததில்லை. தற்கால திரைப்படத் துறையில் இயங்கி வரும் மிக முக்கியமானவர்களை நண்பர்களாக பெற்றிருந்த போதிலும் அவர்களிடம் இதுகுறித்து குறைந்த பட்ச உரையாடலைக் கூட நடத்த முயன்றதில்லை.
அவையெல்லாம் தேவையற்ற ஆணிகள்.
நடக்கும் என இருப்பது நடந்தே தீரும். எழுத்துக்களைப் போன்றே நமது செயல்பாடுகள் மற்றும் அவதானித்தலின் மீதான நம்பிக்கை வலுவாக உள்ளது.
அப்படியான ஒரு முயற்சிதான் “ஊரடங்கு”
இன்றோடு ஐந்தாண்டு என நினைவலை காட்டுகிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட குறும்படம். எந்தத் தொழில்நுட்ப கருவிகளும் பெரிதாகப் பயன்படுத்தாமல் அமெச்சூராக எடுக்கப்பட்ட விழிப்புணர்வுப் படம். ஒவ்வொருமுறைக் காணும் போதும் எனக்குள் சிரித்துக் கொள்வேன் இன்னமும் நன்றாக செய்திருக்கலாமோ என்றெல்லாம் தோன்றும் ஆனால் இயல்பாக எது நடந்ததோ அதையே சிறப்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்னை சந்தோஷப் படுத்தி விடும். எழுதத் தொடங்கிய காலத்தில் கிறுக்கிய முதல் கவிதையைப் போன்ற உணர்வு ஊரடங்கு தரும்.
இதுகுறித்து வந்த சில முக்கியமாக பாராட்டுக்கள் மிகச் சரியான தருணத்தில் வந்தடைந்ததும் ஆச்சரியமானது.
நான் கேட்டுக் கொண்ட உடன் இதற்காக நடித்து அனுப்பிய தோழர்களை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன், படத்தை வெளியிட்டவர்களை, பதிவேற்றிய ஸ்ருதி சானலை மதிப்புடன் நினைத்துப் பார்க்கிறேன்.
காலம் மகத்தானது..
THE SHORT FILM LINK ..