கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?
கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?
தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இடையே பாலமாக இன்றளவும் இருந்து வருபவர்கள் விமர்சகர்களே என்றால் அது மிகையல்ல. கலை அது எந்த வடிவமாக இருந்தாலும் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வழி தேவைப்படுகிறது.
வழி நேர்வழியாக அமைந்து விடுதல் சிறப்பானது.
தனக்குத் தானே “எக்ஸிட்” எழுதிக்கொண்ட பிறகு முன்னைவிட முழுவீச்சில் இலக்கியத்தில் “எண்ட்ரி” கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களைக் குறித்து எழுத வேண்டுமென யோசித்த போது எங்கிருந்து தொடங்குவது என்ற புள்ளி எனக்கு இதுவரை கிடைக்காமல் இருந்தது.
”களம் புதிது” விருது எனது கவிதைகளுக்காக அறிவிக்கப் பட்ட சமயத்தில் இதை எழுதி விடலாமென நினைத்தேன் ஆனால் எந்தப் புள்ளியிலும் பரோபகார வகைமையில் சேர்ந்து விடக் கூடாதென சற்று தள்ளி வைத்துப் பார்த்தேன்.
கவிதைகள்
கதைகள்
விமர்சனம்
திரைத்துறை
அரசியல்
இன்னும் பல முகங்களில் தன் முகத்தை ஒப்புக்கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களின் பணி அல்லது சேவை தற்காலச் சூழலுக்கு எந்த அளவிற்கு அவசியம் என்பதை ஓர் எழுத்தாளராக நான் உணர்ந்து ஒப்புக் கொள்கிறேன்.
“நான் இதுவரை தீபத்தை ஏந்தியபடி ஓடிவந்து மூச்சிரைக்க நின்றபடி யாரிடம் அதை கொடுக்க வேண்டுமென்று யோசிக்கும் போது கரிகாலன் கண்களின் தென்படுகிறார் அவரிடம் என்னுடைய தீபத்திக் கொடுக்கிறேன்” என்று கலை விமர்சகர் இந்திரன் அவர்கள் ”கரிகாலன் 60” என்ற நிகழ்வில் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன்.
(இந்திரன் அவர்களும் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பது தனிப்பட்ட மகிழ்ச்சி)
எஸ்.சண்முகம், இந்திரன், கவிதைக்காரன் இளங்கோ, யவனிகா போன்றோரின் கவிதைகள் குறித்த விமர்சனங்களும் கட்டுரைகளும் தமிழ்ச் சூழலின் முக்கியமானவை. கரிகாலன் அவர்கள் அதை மற்றொரு கோணத்தில் அணுகுவதை மறுக்க முடியாது. அவர் “களம் புதிது” மூலமாகவும் இணையதளங்கள், பத்திரிகைகள், நேர்காணல்கள் மூலமாகவும் பதிவு செய்வதன் மூலமாக ஆரோக்கியமானதாக படைப்பாளர்களை அடுத்தக் கட்டத்திற்கு நகரச் செய்கிறது.
பொதுவாக தொகுப்பு எழுதியவுடன் படைப்பாளர்கள் தங்களைக் குறித்து நல்ல விதமாக எழுதும் படியும் பேசும்படியும் சொல்வது இயல்பான ஒன்று. எல்லா எழுத்தாளர்களுமே இந்த நிலையைச் சந்தித்து அனுபவித்துதான் கடந்து வந்திருப்பார்கள். ஆனால் ஒருவரை இன்னமும் பட்டைத் தீட்ட உபயோகிக்கப்படும் கத்தி தன்னைப் பதம் பார்த்துவிடுவதற்காக என்று அஞ்சும் எழுத்தாளர்களால் ஒருபோதும் இலக்கிய களத்தில் சாதிக்கவோ நிற்கவோ முடியாது. கரிகாலன் தனது ஆயுதத்தை தேர்ந்த லாகவத்துடன் சுழற்றுகிறார்.
தன்னைப் பக்குவப்படுத்தும் ஆசானுக்காக சமயத்தில் உயிரைக் கொடுத்தப் புராணக் கதைகளையும், சாலைகளில் நின்று தத்துவம் என்ற பெயரில் இளைஞர்களை வழிமாற்றுகிறார் என்று சொல்லப்பட்டு பிறகு தத்துவ மேதையாக உலகமே அங்கீகரித்துக் கொண்ட மேதைகளின் கதைகளையும் வாசித்திருக்கிறோம்
இன்று வெகு எளிதாக “பூமர்” என்று சொல்லி விடுகின்றனர்.
”அவனுக்கு அவன் மொழியில் சொல்லனும்” என தன்னை புரட்டிக் கொள்ளும் கரிகாலனின் மாயமொழியும் இப்போதைக்கு தேவைப்படுகின்றன. மருந்தில் தேன் கலக்கும் வித்தை என பார்க்கிறேன்.
அவருடைய அறுபது வயதுக் கட்டுரைகளில் பெரும்பாலும் கவனிக்கப் பட வேண்டிய எல்லாக் கலைத் துறையும் வந்துவிடுகின்றன. சலிப்பூட்டக் கூடிய ”போலச்செய்தல்களை” கரிகாலன் சுட்டும் விதமும் நுணுக்கமாக இருக்கிறது. அவரின் ஒப்பீடு பெரும்பாலும் மேற்கத்திய கலையோடு ஒத்திருந்தாலும் அவை தமிழ்ச் சூழலின் தரத்திற்கான ஏற்பாடாக கவனிக்கிறேன்.
ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் மீதான கரிகாலனின் பார்வையும்
மொழிப் பெயர்ப்பாளர்களின் மீதான் பார்வையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தனது கொள்கைக்கு நியாயம் செய்யும் வெகுசிலருள் ஒருவராகவும் கரிகாலன் அவர்களைக் காண்கிறேன்.
இக்கட்டுரையின் தலைப்பில் சொன்னது போல கரிகாலனுக்கு மூச்சிரைக்கும்போது கையிலுள்ள தீபத்தை ஏந்தப் போகும் கைகள் தமிழ்ச் சூழலுக்கு மிக அவசியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
(கரிகாலனே முகத்தில் மருவை வைத்துக் கொண்டு மீண்டும் தொடங்கினாலும் மகிழ்ச்சியே)
புகழ்ச்சிக்கு அப்பார்ப்பட்ட கட்டுரையாகவே இதை எழுதத் தொடங்கினேன். ஓரளவு பின்பற்றியிருக்கிறேனென நம்புகிறேன்.
– பாலைவன லாந்தர்