கட்டுரைகள்கலை

ஐ ட்வெண்டி கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு

 

ஐ 20 கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு

இந்த ப்ளாக் தொடங்கியவுடன் முதலில் இந்தக் கட்டுரையைத்தான் பதிய வேண்டுமென காத்திருந்தப் பகிர்வு..

எங்களிடம் ஒரு கார் இருந்தது. வைக்கம் பஷீரின் கதையிலுள்ள யானையைப் போன்ற கார். மெட்டாலிக் க்ரே வண்ணத்தில் வேண்டுமென்று அடம் பிடித்து ஆர்டர் செய்து காரின் சாவியை வாங்கிக்கொண்ட நாள் இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

என் பெரியப்பாவிடம் ஓர் அம்பாஸிடர் கார் இருந்தது. அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம் அப்போதே அவரின் காரில் ஏறும் போதும் பயணிக்கும் போதும் நமக்கென ஒரு கார் இல்லையே என ஏக்கம் இருக்கும். அப்பா நினைத்திருந்தால் எப்போதோ வாங்கியும் இருந்திருக்கலாம். அப்பாவைப் பொறுத்தவரை தேவையற்ற எந்த செலவுகளையும் செய்ததில்லை. கார் வாங்குவதை விட அதற்கான பராமரிப்புச் செலவுகளை எண்ணியே அதைத் தவிர்த்திருந்தார். சென்னையின் வாழ்வியலுக்கு ஆட்டோவை விட பொருத்தமான வாகனம் எதுவும் இல்லை என்பார்.

எங்களின் ரெஸ்டாரண்ட் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் கார் வாங்கும் முடிவை எடுத்திருந்தோம். கார் வீட்டிற்கு வந்ததில் இருந்து என்னைப் பார்க்க வந்த உறவினர்கள் தோழமைகள் எல்லாருமே காரின் வண்ணம், தேர்வு குறித்துப் பேசும் போது எனக்குப் பெருமையாக இருக்கும். சூர்ய வம்சம் திரைப்படத்தில் வருவதைப் போல் நான்கைந்து கார்கள் நிற்பதாக கற்பனைச் செய்துக் கொண்டு சிரிப்பேன்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மகளும் நானும் சேர்ந்து காரினைக் கழுவ அதிகமாக மெனக்கெடுவோம் அது ஒரு சம்பிரதாயத்தைப் போல் அதற்காகவே ஆம்வே ப்ராடக்டில் கார் வாஷ் அது இதுவென அதிகமாக பார்த்துப் பார்த்து செலவு செய்தோம். காருக்கென ஒரு சிறிய வாக்யூம் க்ளீனரும் வாங்கினோம் இதெல்லாம் பிறர் கண்களுக்குச் சாதரணமாகத் தோன்றினாலும் என்னளவில் கொண்டாட்டமே.


நாளடைவில் காருடன் பேசவும் தொடங்கினேன். கார் எனக்கு எப்படி நண்பனாகிப் போனானோ என் மகளுக்கும் தோழனாகிப் போனான். காரினை அவன் இவன் என விளித்துப் பேசும்போது சுற்றியுள்ளவர்கள் எங்களை ஒரு மாதியாகப் பார்த்துக் கொண்டனர். எனக்கு காருக்குள் வைக்கும் செயற்கை வாசனைத் திரவியங்களினைப் பிடிக்காது. ஆனால் இவனுக்காகவே விலையுயர்ந்த இயற்கை திரவியங்களை ஃபாரஸ்ட் எஸ்ஸென்சியல் கடையில் வாங்கி வைப்பேன்.

காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது பெண்களுக்கு சற்று கர்வம் கூடுவது இயல்பானது. எனவே எனக்கு கார் ஓட்டும் ஆசையும் அதிகமானது கணவரிடம் தயங்கித் தயங்கி கேட்டபோது சில வரிகளில் அதை இனி கேட்காதவாறு செய்தார் அந்த வரிகள்..

“நீ நல்லாத்தாம்மா ஓட்டுவே எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு ஆனா எதிர்ல வரவன நம்ப முடியாதில்ல யார்மேலயாவது ஏத்திடுவே வேணாம்மா”

இப்ப உள்ள ட்ரெண்டுக்கு சொல்லனும்னா.. ச்சோளி முடிஞ்ச்..

காரில் கேட்பதெற்கென பாடல்களைத் தேடித்தேடி தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக தோழிகளுடன் திருச்சி சென்ற சமயத்தில் முன் இருக்கையில் அமர்ந்து ரேடியோ ஜாக்கியாக பாடல்களை ஒலிபரப்ப அவர்கள் “லாந்தருக்கு செம்ம டேஸ்ட்” என்றார்கள் அது அவனிடம் இருந்து வந்த பழக்கம் என்பதை நானறிவேன். எங்கு செல்கிறோமோ அதற்கு ஏற்றாற் போல் இளையராஜா, ரஹ்மான், யுவன், ஹாரிஸ், தேவா, இம்மான் போன்றோரை வம்புக்கிழுப்பேன் அவர்களுக்குள் சண்டையும் மூட்டி விடுவேன் எப்படித் தெரியுமா??

“டாக்சி டாக்சி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஈசி”
“காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல” இப்படித்தாங்க..

நல்லவேளையாக அவனுக்கு பெயர் வைக்கவில்லை. மூன்றரை வருடங்கள் எங்களோடு இருந்தான். நான் என் மகனை வயிற்றில் வைத்திருந்த நாட்களில் அவன் என்னை தன் வயிற்றில் ஏற்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்வான். அவனிடம் சொல்வேன்

“டேய் டெலிவரிக்கு போகும் போது பள்ளம் மேடுப் பார்த்து கூட்டிட்டுப் போடா”ன்னு அவன் ம்ம் என்று சொன்னது எனக்கு கேட்டிருந்தது.

என்னைப் போல் ரோஷக்காரன் சொன்னதைப்போல் அலுங்காமல் அழைத்துப் போய் மிகச்சரியான சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்தான். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு உடலிலுள்ள மொத்த எனர்ஜியையும் இழந்து வயிற்றில் தையலோடு கையில் பூக்குவியலாகப் பிறந்த மகனை அணைத்தபடி தாங்கித் தாங்கி வந்த என்னை அவனொரு அன்னையாகவே மாறி அணைத்து தனக்குள் ஏற்றிக் கொண்டான். நான் அவனிடம் டேய் மகன் பிறந்திருக்கிறானென சொன்னேன். நீங்கள் நம்பமாட்டீர்கள் ஒருத் துளிக்கூட அசைக்காமல் என்னை வீட்டிற்குள் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தான்.

அவனைப் பிரியும் காலம் வந்தது

தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் கணவர் தொழிலே வேண்டாமென முடிவெடுத்து மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார். கிட்டத்தட்ட அது எங்களின் போராட்டக் காலமாக இருந்தது. உச்சிக்குச் சென்று கீழே விழுந்தால் ஏற்படும் வலியும் அடியும் சொற்களால் நிரப்ப முடியாதது. சென்னையில் அதற்கு மேல் இருக்க வேண்டாமென முடிவெடுத்தோம் ஆனால் எங்கே போவதென தெரியவில்லை. சட்டென இருள் சூழ்ந்துக்கொண்டு மூச்சுத் திணறுவதை உணர்ந்தோம். கையில் பிறந்து சில நாட்களே ஆகிய மகன்.. பள்ளிச் செல்லும் மகள்..

ஒட்டுமொத்தப் பொருட்களையும் லாரியில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தோம். என் மகன் பிறந்தால் விளையாட வேண்டுமென தூங்க வைக்க என பார்த்துப் பார்த்து வாங்கிய விலையுயர்ந்த பொருட்களின் மீது மகனின் வாசனைக் கூட படவில்லை. ஜஸ்ட்பார்ன் கடையில் அவனுக்காக வாங்கிய மரத் தொட்டிலை லாரியில் ஏற்றும் போது மனம் அறைந்து சொல்லியது.

“இனி எதையும் திட்டமிடாதே”

எனக்கு அதிகமாக வலிக்கும் போதெல்லாம் ஒன்றை நினைத்துக் கொள்வேன் அது என்னை விட அதிகமான வலிகளைச் சுமந்த மற்றவரின் வலி.. குழந்தையே இல்லாதவனை விட அல்லது பிறந்து இறந்த குழந்தையின் பெற்றவளின் வலியை விட என் வலி மிகச் சாதாரணமானது தானே

என் கையில் மகன் இருக்கிறான் வேறென்ன வேண்டும்..

பாதைகள் இரண்டாகப் பிரிந்தது என் ஊரின் வழி, அவர் ஊரின் வழி இரண்டுக்கும் இடையே காரில் பிரயாணித்தபடி இருந்தோம். சில நாட்கள் அங்கே சில நாட்கள் இங்கே.. ஆனால் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கிக்கொள்ள மனம் இடம் தரவில்லை. காரின் முன் இருக்கைக்குக் கீழே இரண்டு டவல்களை விரித்து மகனைத் தூங்க வைப்பேன். காரிலேயே பல நாட்களாக பயணித்திருக்கிறோம். என் கணவர் வெளிநாட்டிற்கும் போக முடிவெடுத்ததை காரில் வைத்து தான் என்னிடம் தெரிவித்தார். அவனுக்கும் கேட்டிருக்கும் அல்லவா?

இறுதியாக நாங்கள் குடும்பத்தோடு குற்றாலம் போனது அப்போதுதான்.. எங்களின் இறுக்கத்தைத் தவிர்க்க குடும்பமாக யோசித்து அழைத்துப் போன ட்ரிப் அது..

குற்றாலத்திலிருந்து பாலருவிக்குச் செல்ல புறப்பட்டோம் மொத்தம் நான்கு வண்டிகள் நம்ம தலைவர் மலையில் ஏறும்போது சும்மா சுத்திச் சுத்தி லாகவமா ஏறுவார். எனக்கு சும்மாவே உயரமென்றால் ஓர் அச்சம் ஆனாலும் அவனை நம்பி ரொம்ப கூலாக பயணித்தேன் மகனுக்கு நான்கு மாதங்கள் இருக்குமென நினைக்கிறேன் என்னோடு அவனும் மலையேற எல்லாமே சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

பாலருவியை அடைந்தவுடன் மலை முகட்டில் வரிசையாகக் கார்களை பார்க்கிங் செய்திருந்தார்கள் நல்ல சீசன் என்பதால் கூட்டமும் அதிகமாக இருந்தது. கணவர் காரை பார்க்கிங் செய்ய மலை முகட்டின் விளிம்பிற்குக் கொண்டுச் சென்று அளவு பார்த்து சரியாக பார்க்கிங் லைனில் நிறுத்த ப்ரேக் போடுவதற்காக ரிவர்ஸ் எடுக்கிறார் ரிவர்ஸ் கியர் விழாமல் கார் ஓர் அடி முன்னோக்கிச் செல்கிறது, மீண்டும் ரிவர்ஸ் போடுகிறார் மீண்டும் ஓர் அடி முன்னோக்கிச் செல்ல நிலைமை விபரீதமாவதை உணர்ந்து சுற்றிலும் உள்ளவர்கள் கத்திக் கூப்பாடுப் போட பின்னாடியே வந்த எங்கள் குடும்பத்தினர்கள் கலவரமாகக் காரைச் சுற்றி நிற்க மூன்றாவது முறையும் ரிவர்ஸ் முன்னோக்கிச் செல்ல முன்புறமாக அமர்ந்திருந்த எனக்கு பாதாளத்தின் ஆழம் துல்லியமாகத் தெரிய கணவர் என்னை இறங்கச் சொல்கிறார் நான் மறுத்துப் பிடிவாதமாக அமர்ந்திருக்க… கடைசி ரிவர்ஸில் வண்டி பின்னோக்கிச் சென்று ப்ரேக் பிடிக்க நிற்கிறது.

அம்மா ஓடிவந்து என்னை கட்டியணைத்து அழுதுப் புலம்ப சுற்றியுமுள்ளவர்கள் ஆளுக்கொரு வார்த்தைகளைச் சொல்ல நான் காரிடம்
“ஏண்டா ஒனக்கென்னதான் ஆச்சு’ என்று கேட்டுக் கொண்டிருந்தேன்..

அதற்குப் பிறகு இதுவரை நான் மலைப் பிரேதசங்களைப் பற்றி யோசித்ததுக் கூட இல்லை.

அவனை விற்ற வெகு நாட்களுக்குப் பிறகு ஒருமுறை ஊரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம் என் கணவர் ரயில் சன்னல் வழியாக

“அதோ அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஐடி மேனேஜர் ஒருவர்தான் நம்ப காரை வாங்கி இருக்கிறார்” என்றார்

நான் என்னால் முடிந்தமட்டும் என் கண்களையும் தலையையும் உட்புறமாகத் திருப்பிக் கொண்டேன்.

– பாலைவன லாந்தர்.








Share :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *