கட்டுரைகள்

காதலே காதலே தனிப்பெரும் துணையே..

காதலே காதலே தனிப்பெரும் துணையே

அன்னிக்கு விடிஞ்சதே அவர்களைப் பார்க்கத்தான் என்று நினைக்கத் தோன்றியது. ”வந்துப்போன” என்ற வார்த்தை சிலருக்கு சாதாரணமாக வந்துப் போவதில்லை. பயணங்களில் எத்தனையோ நபர்களைச் சந்தித்திருக்கிறோம் சில முகங்கள் பிடித்தமான யாருடைய முகத்தையோ போர்த்திக் கொண்டு சிறிய பயணத்தை பெரும் போராட்டமாகவும் ஆக்கி விடுகின்றன.

முகமென்றால் முகமே தானா
கண்கள்
உதடு
உயரம்
அட கட்டம் போட்டச் சட்டை
கோடு போட்ட சட்டை

அன்னிக்கு அப்படித்தான் அவன் நான் சிறுவயதில் பழகிய யாரோ ஒருத்தனின் சாயலில் இருந்தான். அவனுடன் ஒருத்தி பேசிக்கொண்டிருந்தான் இல்லை இல்லை பேசாமல் கைகளை கண்களை அசைத்துக் கொண்டிருந்தாள்.

நான் தூரத்திலிருந்தே அவர்களை வெகு நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு நான்குமுனைச் சாலையின் பக்கவாட்டிலிருந்த தேநீர் விடுதி. ஒரு லெமன் டீயுடன் புறப்பட நினைத்த என்னை அவர்களின் வார்த்ககளற்ற உரையாடல் போகவிடாமல் செய்தது. நம்ம மனசிலுள்ள துப்பறியும் புத்தி டக்குனு அவர்களின் பேச்சை மொழிப்பெயர்க்கத் தொடங்கவே..

சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவள் அவனிடம் உன்னை நம்பித்தான் இவ்வளவு தூரம் வந்தேன் என்று கேட்கிறாள். அவன் அவனுடைய பாக்கெட்டிலுள்ள உள்த்துணியை வெளிக்காட்டி என்னிடம் எதுவும் இல்லை என்கிறான். அவள் வெறுங்கழுத்தை, வெறுங்காதுகளை, வெறுங்கைகளை என தனித்தனியாகக் காட்டி கோபமாக கேட்கிறாள்.

அவனுக்கு அவளை அணைத்து சமாதானம் செய்ய வேண்டும் என தோன்றி அவள் அருகில் நெருங்கி தோள்ப்பட்டையில் கையைப் பதிக்க வெடுக்கெனத் தள்ளி விட்டவள்

வயிற்றில்க் கை வைத்து தடவியபடி அவனை கோபமாக பார்க்கிறாள்.
பசியைச் சொல்கிறாளென்று நினைத்தேன்
கர்ப்பமாக இருப்பதைச் சொல்கிறாளென புரிந்துக் கொண்டேன்.
பெண்கள் கர்ப்பத்தை தெரிவிக்கும் சைகை அது.

அவனுக்கு அவமானத்தில் முகம் சிறுத்துப் போகிறது. அவனுடைய வெளிர்ப் பச்சை சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டையும் கடந்து நிர்வாணமாக நிற்பதாக நெளிகிறான். கண்களில் கண்ணீர்த் துளிக்க வேகமாக கைகளைக் கூப்பி கும்பிட்டு அவளை தயவு செய்துப் போய்விடு என்பதாக சைகை காட்டுகிறான்.

அவள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறையப் போய்த்…. தன்னைக் கட்டுப்படுத்தி கையை நிறுத்தி விடுகிறாள். அந்தப் பெரிய மரத்தின் ஒருபக்கம் தங்களை வெளியுலகுக்குக் காட்டாது என்ற நம்பிக்கையில் அவள் அவன் முன் அமர்ந்து ஓங்கி அழத் தொடங்குகிறாள் சடசடவென நான்கைந்து நபர்கள் சூழ்ந்துக் கொள்ள..

வேகமாக எழுந்து அவனுடைய வலக்கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு நகர்ந்து சாலையின் வளைவிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அவனை அமர வைத்து அவள் சற்றுத் தள்ளி நின்று கொள்கிறாள்.

நீண்ட மௌனத்திற்குப்பின் அவள் அவனுக்கு அருகில் அமர மீண்டும் தங்கள் சம்பாசனையைத் தொடங்கினார்கள்



அவன் கண்ணீரைத் துடைத்தாள்
தன் கண்ணீரைத் துடைத்தாள்
ஒரு கையால் மற்றொரு உள்ளங்கையில் வெட்டுக்கத்தியாகக் கீறி கேள்விகளைக் கேட்க
அவன் கையால் வாயை மூடி இனி செய்ய மாட்டேன் என பாவனை செய்தான்

அவள் அவனின் முதுகில் அடித்தாள்
முடியைப் பிடித்து இழுத்தாள்

அவன் அவளின் புடவையுடைய தலைப்பாவினால் முகத்தை மூடிக்கொண்டு பொய்யாக அழுதான். அவள் சிரித்தபடி அவனைத் தள்ளி விட இருவரும் நடந்தபடி காற்றில் மறைந்தார்கள்.

அவர்களில் ஒருவர் ஊமையாக இருக்கலாம்
அல்லது இருவருமே
ஆனால் அவர்களின் உறவுக்கு மொழி இருக்கிறது.

நான் சிறுவயதில் பார்த்துப் பழகிய நண்பனின் சாயல் என்று சொன்னேன் இல்லையா அவனுக்கு அப்போது எண்பது இருந்திருக்கும்

என் தாத்தா அவன்..( அவர்)

இதோ இந்த கிழவனும் கிழவியும் போகும் பாதையில் போகத் தெரியாமல் தனியே போய்ச் சேர்ந்தவர்,,

– பாலைவன லாந்தர்


pictures – google 

Share :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *